Tuesday, August 2, 2016

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் - 15 டி.பி.ராஜலட்சுமி

                                 


டி.பி.ராஜலட்சுமி

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாற்றில் 1911ஆம் ஆண்டு பிறந்தவர் டி.பி.ராஜலட்சுமி.சிறு வயது முதலே அபாரத் திறமையுடன் திகழ்ந்தார்.

7 வயதில் இவருக்குத் திருமணம் ஆனது.பால்ய வயதுத் திருமணம்.ஒரு வருடத்தில் முறிந்தது.இதே கால கட்டத்தில் இவரது தந்தையும் மறைய, குடும்பம் திருச்சிக்குக் குடி பெயர்ந்தது.

அங்கு சி.எஸ்.சாமண்ணா என்பவர் சொந்தமாக நாடகக் குழு ஒன்றை நடத்தி வந்தார்.அப்போதெல்லாம் நடிக்க பெண்கள் வருவதில்லை.ஆண்களே, பெண்கள் வேடத்தையும் போட்டு நடித்தனர்.சாமண்ணாவின் குழுவில் நடிக்க சந்தர்ப்பம் கேட்டுச் சென்ற ராஜலட்சுமியை, அங்கு வந்திருந்த சங்கரதாஸ் சுவாமிகள் பார்த்தார்.இப்பெண்ணை, உங்கள் குழுவில் சேர்த்துக் கொள்ளுங்கள் எனக் கூறினார்.பின், ராஜலட்சுமி அங்கு நடிக்க ஆரம்பித்தார்.இவருக்குக் கிடைத்த முதல் வேடம்பவளக்கொடி என்ற நாடகத்தில் புலேந்திரன் வேடம்.50 ரூபாய் சம்பளம்.பின்னர், மொய்தீன் நாடகக் குழு,கன்னையா நாடகக் குழு என இவர் பயணம் தொடர்ந்தது.

கன்னையா நாடகக் குழுவில் எஸ்.ஜி.கிட்டப்பா நடித்து வந்தார்.அவருக்கு கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்தார் ராஜலட்சுமி.பவளக்கொடி நாடகத்தில் எம்.கே தியாகராஜ பாகவதருக்கு ஜோடியாய் நடித்தார்.

1929ல் கோவலன் அல்லது   The Fatal anklet                 என்ற பெயரில் ஏ.நாராயணன் என்பவர் ஊமைப்படம் ஒன்று எடுத்தார்.இதில், கண்ணகியாக 18 வயது ராஜலட்சுமி நடித்தார்.இதுவே இவரது முதல் சினிமா பிரவேசமாகும்

பின்னர் ராஜா சாண்டோவின் கம்பெனியில் அவர் தயாரித்த உஷாசுந்தரி, ராஜேஸ்வரி ஆகிய மௌனப்படங்களில் நடித்தார்

பேசும் படக்காலம் ஆரம்பித்தது.முதல் பேசும்படம் ஆலமாரா வை அரிதேசிர் இராணி எடுத்தார்.பின் முதல் தமிழ்ப் பேசும் படமான காளிதாஸில் ராஜலட்சுமி நடித்தார்.ஆடினார்.பாட்டுப் பாடி அசத்தினார்

1933ல் கல்கத்தாவில்  சி.எஸ்.துரை என்பவர் முருகனாக நடிக்க ராஜலட்சுமி வள்ளியாக நடிக்க வள்ளித்திருமணம் வந்தது.,அதில் வள்ளி தினைப்புனம் காக்கும் காட்சியில்...

"வெட்கங்கெட்ட வெள்ளைக் கொக்குகளா
விரட்டி அடித்தாலும் வாரீகளா?"

என வெள்ளையர் ஆட்சியை எதிர்த்து நாசுக்காக எழுதிய தேசபக்திப் பாடலைப் பாட அது பிரபலமானது

கோவை சாமிக்கண்ணுவின் சென்ட் தயாரித்த இப்படம் அதிகம் வசூல் பெற்ற முதல் தமிழ்ப் படம் எனலாம்

அப்படத்தில் நாரதராக நடித்த டி.வி.சுந்தரம் என்பவரை காதலித்து மணந்தார் ராஜலட்சுமி.

1933ல் தன் சொந்தப்படம் சத்தியவான் சாவித்திரியை வெளியிட்டார் .பின்னர் வரிசையாக குலேபகாவலி, லலிதாங்கி, அரிச்சந்திரா ஆகிய படங்கள் வந்தன..மக்களால் சினிமா ராணி என போற்றப்பட்டார்.

முதன்முதலாக தமிழ்நாட்டில் ஒரு சினிமா கலைஞருக்கு ரசிகர் மன்றம் தோன்றியது இவருக்குத்தான்.

மதுரை ராயல் டாக்கீஸின் கோவலன் படத்தில் கண்ணகியாய் நடித்தார்.மதுரை வீரன், இந்தியத்தாய் ஆகிய படங்களை தயாரித்தார்.பிரபலம் ஆனாலும் அவர் தனித் த்ன்மையை, சுயமரியாதையை விட்டுத் தரவில்லை.

எவிஎம் தயாரித்த நந்தகுமார் படத்தில் கிருஷ்ணனின் தாய் யசோதையாக நடித்தார்.அதில் புராணப்படி யசோதை கச்சைக் கட்டி நடிக்க வேண்டும் என தயாரிப்பாளர் சொன்ன போது இவர் மறுத்தார்,கடைசியில் இதன் இந்தியில் நடித்த நடிகை கச்சையுடன் நடிக்க, தமிழிலோ யசோதை ரவிக்கையுடனேயே நடித்தார்.

1940க்குப் பின் படிபடியாக இவருக்கான வாய்ப்புகள் குறையத் தொடங்கின.

அந்தக்காலத்தில், பெண் சிசுக்கொலை நடந்து வந்தது.அதை எதிர்த்த இவர், அப்படிப்பட்ட குழ்னதை ஒன்றை  தத்தெடுத்து அதற்கு மல்லிகா எனப் பெயரிட்டு வளர்த்தார்.

1936ஆம் ஆண்டு இவருக்கு ஒரு பெண் குழந்தைப் பிறந்தது.அதற்கு கமலா எனப்  பெயரிட்டார்.

தமிழ்த் திரைபட இயக்குநர்கள் வரிசையில் இவரைப் பற்றி ஏன் இவ்வளவு செய்திகல் எங்கிறீர்களா?

விஷயத்திற்கு வருகிறேன்

எல்லாவற்றிலும் முதன் பெண்மணியாய் திகழ்ந்த இவர் இயக்குநர்கள் வரிசையிலும் முதல் பெண்மணி ஆவார்.

இவர் பெண் கமலாவின் பெயரில் ஒரு நாவல் எழுதி..அதற்கு திரைக்கதை, வசனம் எழுதி அதைப் படமாகத் தயாரித்து, படத்திற்கு மிஸ் கமலா எனப் பெயரிட்டு இயக்கவும் செய்தார்.முதல் பெண் இயக்குநர் ஆனார்.

தவிர்த்து 'இந்தியத்தாய்; படமும் இவர் தயாரித்து இயக்கியது.

1964ல் மரணம் அடைந்த இவர் நடித்த படங்கள் 27 ஆகும்.அந்நாளில் அது அதிகமாகும்

கட்டுப்பெட்டியாய் பெண்களை வைத்திருந்த காலத்தில் அந்தத் தடைகளை மீறி சாதனைப் பெண்ணாய்த் திகழ்ந்த ராஜலட்சுமியை தமிழ்ப் பட உலகம் என்றும் மறவாது.

No comments:

Post a Comment